வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

வெப்ப தாக்கத்தில் இருந்து தொழிற்சாலை ஊழியர்களை பாதுகாக்க காஞ்சிபுரம்பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2024-05-07 22:22 GMT

நீர் சத்து அதிகம் உள்ள தர்பூசணி கீரணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , வெப்பத் தாக்கத்திலிருந்து தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டிய வழிகாட்டல் முறைகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வெப்ப அலையாக தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தமிழக அரசின் சார்பிலும் வானிலை ஆய்வு மையத்தின் மூலமும் கோடை வெப்பம் குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெப்ப தாக்கத்தை எதிர்கொள்ள குடிநீர் குடில்கள், ORS திரவக் கரைசல் ஆகியன மக்கள் குழுமுகின்ற பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், மக்கள் குழுமுகின்ற பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. இப்பணி பொது சுகாதார துறை மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேரடியாக வெயிலில் பணியாற்றுபவர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், தொழிலகங்கள், கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், காவல்துறை, தீயணைப்புத்துறை, பேருந்துத் துறையில் பணியாற்றுபவர்கள் மிக மிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதில் முக்கியமாக தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வெப்பத் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த நிர்வாகம் குடிநீர் குடில்கள், ORS திரவக் கரைசல் அல்லது உப்பு சர்க்கரை கரைசல் (1 லிட்டர் நீரில் உப்பு - 1 தேக்கரண்டி, சர்க்கரை– 6 தேக்கரண்டி) போன்ற நீரிழப்பை ஈடுசெய்யும் திரவக்கரைசல்களை தொழிலகங்களில் ஆங்காங்கே அமைத்திட ஆவண செய்ய வேண்டும்.

இது குறித்து தொழிற்சாலை தகவல் பலகைகளில் வெப்ப அலைகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை அறிவிப்பாக வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளில் மருந்தகங்கள் / டிஸ்பென்சரிகள் இருப்பின் அவ்விடங்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள போதிய அவசரகால மருந்துப் பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோடைகால வெப்ப அலையை தடுக்க வேண்டியவை:-

உடலில் நீர்சத்து குறையாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தல், பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லுதல், ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடித்தல், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், வெளியே செல்லும் போது காலணிகள், தொப்பிகள் அணிதல், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையை கொண்டு செல்லுதல் போன்ற வழிகாட்டல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

எவரேனும் வெப்ப அலையினால் பாதிக்கப்படுவாராயின் மருத்துவ உதவிக்கான 108 இலவச சேவை எண்ணை பயன்படுத்தி மேல் சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ளவர்கள் உதவ வேண்டும்/

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News