காஞ்சிபுரத்தில் ஆடி திருவிழாவில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத் தெருவில் உள்ள ஜெய விநாயகர் ஆலயத்தில் ஆடித்திருவிழா ஊர்வலம் நடைபெற்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-19 20:30 GMT

ஆடி மாத அம்மன் திருவிழா ஊர்வலத்தில் புகுந்து விபத்து ஏற்படுத்திய கார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே பல்வேறு பகுதியில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இத் திருவிழாவில் சாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வருவது வழக்கம்.

அவ்வகையில் , காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரை தெருவில் உள்ள ஜெய விநாயகர் ஆலயத்தில் ஆடி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேற்று இரவு மாட்டு வண்டியில் கரிக்கினில் அமர்ந்தவள் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வந்தது.

பாவாஜி தெரு வீதியாக ஊர்வலம் வந்திருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கார் ஓட்டி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாமி வீதி உலாவில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வெங்கடேசன், மதன்ராஜ் , அக்பர் பாஷா , சுகுமார், ஞானப்பிரகாசம், தனுஷ் , குரு பிரசாத், சரண் , ஞானசேகர் ஆகிய 9 பேர் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக 8 நபர்களும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தும் , அதன் ஓட்டுனர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடித் திருவிழா ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News