காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ள கல்லூரிகளில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது

Update: 2024-03-28 12:16 GMT

காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் எனும் வாக்குறுதி ஏற்று மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை காட்டிலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு கூடுதலாக பதிவாகும் வகையில் அனைத்து வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பரிசீலனை செய்யப்பட்டு, அதிமுக , திமுக உள்ளிட்ட ஐந்து கட்சிகள், எட்டு சுயேச்சைகள் என 13 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு பதிவாகும் வகையில் அனைத்து வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தினால் அனைத்து துறைகளின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா தலைமையில் இன்று காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் அனைவரும் வாக்களிப்போம் என கூறும் வகையில் 100 சதவீத வாக்குப்பதிவு எண்ணிக்கை மற்றும் பதிவுகள் வழியாக பதிவு செய்து உறுதி செய்தனர்.

மேலும் அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று முதல் முறையாக வாக்களிக்கும் நபர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் விதம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாணவர்களுக்கு விளக்கம் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கலைச்செல்வி கூறுகையில், வாக்கு நமது உரிமை அதை செலுத்துவதும் கடமை எனவே 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கை கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவை காட்டிலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலாக வாக்குப்பதிவு மேற்கொள்ளும் வகையிலே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் ஊழியர்கள் மாணவ மாணவியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News