திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நிபந்தனை ஜாமீனில் விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

Update: 2022-03-14 07:08 GMT

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை கையெழுத்திட வந்தார்.

சென்னையில் கடந்த 19 -2 -2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற தி.மு.க. பிரமுகரை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அப்போது அந்த நபரை மேல் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று தாக்கியதாக விமர்சனம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தி.மு.க. அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நில அபகரிப்பு புகார் தொடர்பான ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகள் தொடர்பாக ஜெயக்குமார் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு ஜெயகுமார் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சென்னை சிறையில் இருந்து விடுதலையான ஜெயக்குமார் இன்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது அவருடன் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் வந்திருந்தனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது

தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் அ.தி.மு.க.வை அளிப்பது பற்றிய சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கழக முன்னோடிகள் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான வழக்குகளை தினித்து கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க. அரசு ஒன்றை ஒன்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது வரலாற்றை திரும்பிப் பாருங்கள் ஒரு வீழ்ச்சிக்குப் பின்னால் தான் மாபெரும் வெற்றி பெற்ற இயக்கம் அது அ.தி.மு.க.

2006-இல் வீழ்ச்சி அடைந்தது 2011 மிகப்பெரிய அளவில் மாபெரும் வெற்றி அடைந்து ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தப்பட்டது.

2021 ஆம் ஆண்டை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தோம். அதாவது தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் வெறும் 3 சதவீதம் தான்  வாக்கு வித்தியாசம்.

அடுத்த கட்டமாக 2024 பாராளுமன்ற தேர்தல் வரும்போது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து காட்டுவோம்.

அதேபோன்று 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரும்போது உறுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி அடையும்.அ.தி.மு.க. என்பது ஒரு வரலாறு என்பதை தி.மு.க. தலைவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News