புஞ்சை புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதி விபத்து: பாட்டி, பேரன் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதிய விபத்தில், பாட்டி மற்றும் பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2025-03-09 11:00 GMT

புஞ்சை புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதிய விபத்தில், பாட்டி மற்றும் பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள செம்படாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23). இவரது பாட்டி உன்னம்மாள் (60). இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சை புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் புளியம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்த போது, புஞ்சை புளியம்பட்டியில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட ஒரு டாரஸ் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென ரமேஷ் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் அவரது பாட்டி உன்னம்மாள் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இதை பார்த்து அடைந்த பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்த உன்னம்மாள் மற்றும் ரமேஷை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News