அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
Erode News- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இளைஞர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Erode News, Erode News Today- அந்தியூர் அருகே இளைஞர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் சுப்ரதீபன் (வயது 21). இவர் அந்தியூர் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரை முன்விரோதம் காரணமாக பவானி அருகே உள்ள பெரியமோளபாளையத்தை சேர்ந்த 8 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சுப்ரதீபன் அளித்த புகார் பொய்யானது எனக்கூறி அவரது வீட்டில் அந்தியூர் போலீசார் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நோட்டீஸ் ஒட்டினர். இந்த நிலையில், சுப்ரதீபன் நேற்று (3ம் தேதி) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் விரைந்து சென்று சுப்ரதீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, நேற்று இரவு 7 மணி அளவில் சுப்ரதீபனின் உறவினர்கள், அவருடைய தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்ததும் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். எனினும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த சம்பவத்தால் அந்தியூர் - பர்கூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.