ஈரோடு மாவட்ட ஜமாபந்தி 2-வது நாளில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு ஜமாபந்தி 2-வது நாளில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Update: 2023-05-26 11:38 GMT

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) ஜமாபந்தி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.


இதில், ஈரோடு வடக்கு உள் வட்டத்திற்குட்பட்ட குமிலம்பரப்பு, அணைநாசுவம்பாளையம், சர்க்கார் பெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம், மேட்டு நாசுவம்பாளையம், கரை எல்லப்பாளையம், எலவமலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தொடர்ந்து,  ஜமாபந்தி தீர்வாயத்தில் ஈரோடு வடக்கு உள்வட்டத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை சங்கிலி ஆகியவற்றையும் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.


மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையினையும், 13 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் ஆதரவற்ற விதவை உதவித்தொகையினையும், 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையினையும், என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அலுவலக மேலாளர் (குற்றவியல்) விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பரமணியம், வட்டாட்சியர்கள் ஜெயகுமார் (ஈரோடு வருவாய்), பரிமளாதேவி (சமூக பாதுகாப்பு) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News