பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், ஆம்னி வேன், 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

Update: 2024-05-04 11:00 GMT

காரில் ரேஷன் அரிசி கடத்திய உதயகுமார்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஈரோடு சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளித்திருப்பூர் - பவானி ரோடு கல்பாவி பிரிவு ரோடு அருகில் உள்ள பகுதியில் ரேசன் அரிசியை கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் வெள்ளித்திருப்பூர் - பவானி ரோடு கல்பாவி பிரிவு ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது 11 மூட்டைகளில் 550 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த உதயகுமார் (வயது 55) என்பதும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருவங்காடு பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உதயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து காரையும், 11 மூட்டைகளில் இருந்த 550 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News