ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Update: 2023-01-24 07:00 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா. கடந்த நான்காம் தேதி  மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அதற்கு இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடந்தது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஆகியோர் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. 


பின்னர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. 1480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. இதில் 5 சதவீத இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவில் சோதனை செய்யப்பட்டது. இதில் 1 சதவீத இயந்திரங்களில் 1200 வாக்குகளுக்கு அதிகமாகவும், 2 சதவீத இயந்திரங்களில் 1000 வாக்குகளும், மீதம் உள்ள இயந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த பிரச்சினையும் இன்றி சரியாக செயல்படுகின்றன. இந்தப் பணி முடிந்ததும் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

Tags:    

Similar News