சேலம் ஓமலூர் அருகே கலவரமாக மாறிய கோவில் திருவிழா: 23 பேர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலவரமாக மாறிய கோவில் திருவிழாவில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-05-02 08:03 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோவில் திருவிழா கலவரமாக மாறியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது போலீசார் மோதலை கட்டுப்படுத்தி பதற்றத்தை தணித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் தீவட்டிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும், மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. தங்களின் முடிவு குறித்தும் நாளை தெரிவிப்பதாக கையெழுத்திவிட்டு இரு தரப்பினரும் சென்ற நிலையில், மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது. வாக்கு வாதத்தில் தொடங்கிய மோதல் கலவரமாக வெடித்துள்ளது.இது தீவட்டி பட்டி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோதலில் 5 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மோதல் வெடிக்காமல் இருக்க போலீசார் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய பிறகு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News