தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிக்கணக்கு தொடங்குவோம்: அமித்ஷா நம்பிக்கை

தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிக்கணக்கை தொடங்குவோம் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-02 07:56 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கண்டிப்பாக இந்த முறை வெற்றிக்கணக்கை தொடங்குவோம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார். கேரளாவில் இதுவரை ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லாத நிலையில், இந்த முறை வெற்றி பெறுவோம் என்று கூறியிருக்கிறார்.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 3 ஆம் கட்ட தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ள பாஜக, ஆட்சியை தக்க வைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா உள்பட நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிப்பதில் வியூகம் வகுத்து வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வடக்கில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவிற்கு தென் மாநிலங்கள் எட்டாக்கனியாகவே உள்ளது.

ஆனால், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிக் கணக்கை துவங்க வேண்டும் என்ற வியூகத்துடன் பாஜக முழு வீச்சில் வேகம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நிச்சயமாக தங்கள் வெற்றி கணக்கைத் திறப்போம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமித்ஷா கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாங்கள் சிறந்த போட்டியாளராக உள்ளோம் நிச்சயமாக இரு இடங்களிலும் எங்கள் வெற்றி கணக்கைத் தொடங்குவோம். ஆனால், கடுமையான போட்டிகள் இருப்பதால், எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை மதிப்பிடுவதில் சிக்கல் உள்ளது. ஆந்திராவை பொறுத்தவரை கூட்டணி வைத்துள்ளோம். இது தொடக்கம் தான். லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இதுவரை அங்கு இல்லாத அளவு அதிக இடங்களை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும், மோடி மீண்டும் பிரதமராவார். வாக்குப்பதிவு குறைவாக பதிவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு கட்டத்தில் இருந்து 100 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 400 இடங்கள் என்ற இலக்கை தாண்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

Tags:    

Similar News