அந்தியூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
அந்தியூர் அருகே சின்டெக்ஸ் டேங்க் வைக்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி பழுது அடைந்ததை அடுத்து அதை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து ஆறுமாதம் ஆகியும் கட்டி தராதால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அந்த பகுதி பொதுமக்கள் இடத்தில் அந்தியூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை செய்தனர். அப்போது உறுதியாக இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் சின்டெக்ஸ் டேங்க் வைத்து தருவதாக தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை சின்டெக்ஸ் டேங்க் வைக்க முன்வரவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி இல்லாததால் இரவு 12 மணி ஒரு மணி அளவில் தண்ணீரை எடுத்து விடுகின்றார்கள். நாங்கள் பைப்பின் முன்பு காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. காலையில் எழுந்தவுடன் இந்த பகுதியில் உள்ள குடும்பத்தினர் கூலி வேலைக்கு சென்று விடுகின்றோம், வீட்டிற்க்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இந்த பகுதி மக்களிடத்தில் டேங்க் வைப்பதற்கு நிதி வசூல் செய்து கொடுத்தால் விரைவில் டேங்க் அமைத்துக் கொடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோயில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை செய்தனர் இதில் உடனடியாக இந்த பகுதிக்கு டேங்க் அமைத்து தர வட்டார வளர்ச்சி அலுவலர் இடத்தில் பேசி உறுதியாக டேங்க் அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது