பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-02 16:28 GMT

சிறுத்தை (பைல்படம்).

பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, ஆசனூர், தலைமலை கேர்மாளம், கடம்பூர், பங்களாபுதூர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.‌ இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் வெளியேறி வருகிறது. மேலும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும் கால்நடைகளை வேட்டையாடியும் வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (55). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. செல்வம் தனது தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டின் முன்பு உள்ள மாட்டு கொட்டகையில் பசு மாடுகளை கட்டி வைத்து விட்டு தூங்கச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இன்று(வெள்ளிக்கிழமை) காலை எழுந்து பார்த்தபோது மாட்டு கொட்டகையில் இருந்த பிறந்து 6 நாள் ஆன பசுமாடு கன்று குட்டி ரத்த காயங்களுடன் கன்று குட்டி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததும், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டையும், கன்றுக்குட்டியையும் பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடம் என்பதை கண்டுபிடித்தனர். தோட்டத்துக்குள் புகுந்து மாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News