மத்திய அரசைக் கண்டித்து கோபியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து, கோபி பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத காரணத்தால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து, கோபி பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து அதனை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டது.
இந்த தேசிய கல்விக் கொள்கையின்படி ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் அல்லது மூன்றாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மேலும், இந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு வழங்கியும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி உதவியை முற்றிலுமாக நிறுத்தியும் வைத்துள்ளது.
இந்த புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதால் சுமார் ரூ.573 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில மாணவரணியின் துணைச்செயலாளர் சிவபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மண்டலத் தலைவரும், வழக்கறிஞருமான சென்னியப்பன் தொடக்கவுரையாற்றி துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் கே.கே.செல்வம் மற்றும் திராவிடர் கழகம் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.