ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11வது சுற்று முடிவில் கிட்டத்தட்ட 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.;
ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11வது சுற்று முடிவில் கிட்டத்தட்ட 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 13 வேட்பாளர்கள் மற்றும் 31 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு யந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (பிப்ரவரி 8ம் தேதி) தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
காலை 7.30 மணி அளவில் தபால் வாக்கு இருப்பறை திறக்கப்பட்டு தபால் வாக்குகள் அடங்கிய 3 பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு பெட்டியாக சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில் மொத்தமுள்ள 251 தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 197 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13 வாக்குகள் பெற்றார்.
நோட்டாவுக்கு 8 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை வகித்தார். இறுதி சுற்று வரை அவரே முன்னிலையில் இருந்தார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 11வது சுற்று முடிவில் 76,278 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 16,543 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து 2வது இடத்தில் உள்ளார்.
இதனிடையே, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் அவர்கள் திமுகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்