ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.25) நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.25) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 'வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற தலைப்பில் வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஜன.25) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அவர் தெரிவித்ததாவது, அனைவருக்கும் 15வது தேசிய வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள். 1950 ஜனவரி 25ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக இந்த வாக்காளர் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம்.
இந்த வருடம் இந்திய தேர்தல் ஆணையமானது 75 ஆண்டுகள் நிறைவடைவது மேலும் சிறப்பாகும். இந்த வருடம் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வாக்காளர் தினமானது அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2023 இடைத்தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குகளும், நாடாளுமன்ற 66.05 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற தலைப்பு தலைப்பாக இல்லாமல் செயலில் காட்ட வேண்டும். இதற்காக பிப்ரவரி 5ம் தேதி அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதனை விடுமுறையாக பயன்படுத்தாமல் வாக்களிப்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வாக்களித்து, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபடியான வாக்கு சதவீதத்தினை அடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரக கூட்டங்கில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனையடுத்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி சுவரொட்டி வடிவில் சுவர் இதழ் போட்டி, பாட்டு போட்டி, கடித வரைவு போட்டி, கோலப் போட்டி (மகளிர் சுயஉதவிக்குழு) மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், சிறந்த தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், சிறந்த கல்லூரி வளாக மாணவ தூதுவர் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை பொன்னாடை போர்த்தி, கனிகள் வழங்கி கௌரவித்தார். மேலும் 3 இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளாகள் தா.முஹம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்), மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு, வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.