ஈரோட்டில் 76வது குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை
ஈரோட்டில் 76வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கௌரவித்தார்.;
ஈரோட்டில் 76வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கௌரவித்தார்.
ஈரோடு அருகே 46 புதூர் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், 76வது குடியரசு தின விழா இன்று (ஜன.26) நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அவர் காவல் துறையினரின் அணி வகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.
தொடர்ந்து, 50 காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 5 பள்ளிகளைச் சார்ந்த 300 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி அவர் பாராட்டினார்.
இவ்விழாவில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அஜய் குமார் குப்தா, தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ் குமார் ஜாங்கிட், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், வணிகவரி ஈரோடு கோட்ட இணை ஆணையர் (மாவ) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) (ஆயுதப்படை) அர்பிதா ராஜ்புத், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜன் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், உட்பட காவல் துறையினர், அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.