தர்மபுரி நகைக்கடையில் 20 சவரன் 'அபேஸ்'; ஊழியர்களே திருடியது அம்பலம்

தர்மபுரியில் உள்ள பிரபல நகைக்கடையில் 20 சவரன் திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-31 16:45 GMT

திருடுபோன நகைக்கடை.

தருமபுாி நகரில் பிரபல தனியார் தங்க (தங்கமயில்) நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில், மேலாளர், காசாளர், விற்பனையாளர், நகை மதிப்பீட்டாளர், பாதுகாவலர் என 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி, மண்டல மேலாளர் திடீரென கடைக்கு வந்து நகைகளின் இருப்பு மற்றும் விற்பனை, விற்பனைக்கான பணம் உள்ளிட்டவைகள் குறித்து தணிக்கை செய்துள்ளார். அப்போது கிளை மேலாளா் சுரேஷ் நகைகளின் எண்ணிக்கை மற்றும் எடைகளை சரிபார்த்தபோது 20 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. தொடர்ந்து கடையில் பணியாற்றும் ஊழியா்களிடம், மேலாளர் சுரேஷ் விசாரணை மேற்கொள்ளும் போது யாரும் எடுக்கவில்லை என தொிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் நகைகளை எடுத்து செல்வதும், கொண்டு வந்து உள்ளே வைப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடை மேலாளர் சுரேஷ், தருமபுரி நகர காவல் நிலையத்தில், 20 தங்க நகைகள் திருடு போனதாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து காவல் துறையினா், சந்தேகத்திற்குரிய நகை கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகை கடையில் பணிபுாிந்து வந்த மாாியப்பன் மற்றும் ஆனந்தபாபு இருவரும், கடையில் உள்ள தங்க நகைகளை அவசர தேவைக்கு எடுத்து சென்று, அருகில் உள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

மேலும் கடையில் வருடாந்திர வரவு, செலவு, இருப்பு குறித்த தணிக்கை நடைபெறும் நேரத்தில் முன்கூட்டியே, அடகு வைத்த நகைகளை மீட்டு கடையில் வைப்பதும், தணிக்கை முடிந்ததும் மீண்டும் நகைகளை எடுத்து சென்று அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்வதும் அம்பலமானது.

இதனை தொடர்ந்து தனியார் நகை கடையின் முத்திரையை வைத்து, ஊழியர்கள் அடகு வைத்த பல்வேறு வகையான கழுத்து செயின்கள் 146 கிராம் தங்க நகைகளை காவல் துறையினர் மீட்டனர். இந்த மீட்கப்பட்ட 20 சவரன் தங்க நகைகளின் மதிப்பு ரூ.8 இலட்சமாகும்.

மேலும் பணியாற்றும் கடையில் நகை திருடி அடகு வைத்ததாக மாரியப்பன், ஆனந்தபாபு இருவரையும் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து, 20 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தனியார் நகை கடையில் பணியாற்றும் ஊழியார்களே, நூதன முறையில் தங்க நகைகளை திருடி அடகு வைத்து பணம் பெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News