எம்.பி ராசாவின் பேச்சு கீழ்த்தரமானது - தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிசாாமி கண்டனம்

டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது, எம்.பி ராசாவின் பேச்சு கீழ்த்தரமானது என, கண்டனம் தெரிவித்துள்ளார்,

Update: 2022-09-21 09:40 GMT

கோவையில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. அருகில் முன்னாள் அமைச்சர் வேலுமணி.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்  வேலுமணி ஆகியோர் டெல்லியில் இருந்து விமான மூலம் நேற்றிரவு கோவை வந்தனர்.

கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமி்த்ஷாவை சந்தி்த்து பேசினோம். முக்கியமான சில கோரிக்கைகளை அவரிடம் வைத்துள்ளோம்.

முக்கியமாக கோதாவரி காவிரி திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் தடையில்லாமல் கிடைக்கிறது. கஞ்சா போன்ற போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலையை தடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தினோம்.

திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவதுதான், 16 மாத கால ஆட்சியின் சாதனை. ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சு கீழ்த்தரமானது, இந்து மதத்தை புண்படுத்தும் விதமான பேச்சு, இது வன்மையாக கண்டிக்கதக்கது. 

அதிமுக உட்கட்சி விவகாரம் நீதி மன்றத்தில் இருக்கிறது; இது தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்ததாக சொல்வது தவறானது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை, வறண்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு தடையில்லாமல் நீர் கிடைக்கும் என்பதால், நதி நீர் கோரிக்கையை நினைவுபடுத்தவே அவரை சந்தித்தோம்.

தமிழகத்தில் பரவும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. இது எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அரசு விழிப்போடு இருந்து மக்களையும் குழந்தைகளையும் காக்க வேண்டும். மருத்துவகுழுவினர் இது குறித்து ஆராய்ந்து காய்ச்சல் பரவலை தடுக்க, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார். பின்னர் கார் மூலமாக, சொந்த ஊரான சேலத்துக்கு, அவர் புறப்பட்டுச் சென்றார்.

Similar News