சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள்
சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் கூறினார்.;
சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
சென்னையை இரண்டு நாட்களாக மிரட்டி வந்த மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து சென்று விட்டது. ஆனாலும் இந்த புயலானது சென்னை அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டு இருந்தபோது இரண்டு நாட்கள் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடானது.
பல இடங்களில் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பல தெருக்களில் இருந்து இன்னும் தண்ணீர் வடியவில்லை. முக்கிய சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது.
இந்த நிலையில் மழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எடுத்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, பெருங்குடி, மடிப்பாக்கம் பகுதிகளில் இரண்டு நாட்களில் 73 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் 60 அல்லது 65 சென்டிமீட்டர் மழை தான் பதிவாகும் .ஆனால் இரண்டு நாட்களில் 73 சென்டிமீட்டர் மழை பதிவானது வரலாற்றில் இல்லாத சம்பவம் ஆகும்.இதன் காரணமாகத்தான் சென்னையில் வெள்ள பாதிப்பு மிக அதிகமாகி விட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு பாதிப்பு ஏற்பட்ட போது மழை மட்டுமே பெய்தது. அதுவும் சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் அல்ல. ஒரு சில பகுதிகளில் மட்டும். புயலானது அப்போது இல்லை. இப்போது புயலும் மழையும் காற்றும் சேர்ந்து கொண்டதால் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்ப நான்கு நாட்கள் ஆனது. ஆனால் இப்போது இரண்டாவது நாளே ஓரளவு நிலைமை சீராகி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மூன்று லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஆவடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தவித்த 3775 குடும்பத்தினர் படகுமூலம் மீட்கப்பட்டனர்.
சென்னை மாநகரில் வெள்ள தடுப்பு பணியில் சுமார் 18000 போலீசார் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் பணி செய்து வருகிறார்கள். தண்ணீர் ஓரளவு வடிந்து கொண்டே இருப்பதால் சென்னை நகரில் இன்று 800 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. காரணம் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்பதால் தான். மேலும் செல்போன் கோபுரங்கள் சரி செய்யப்பட்டு வருவதால் தகவல் தொடர்பு சாதனங்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. மின் வினியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் விரைவாக மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இவர் அவர் கூறினார்