கோபி அருகே புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே குடும்ப தகராறில் புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-05-09 10:50 GMT

கோபி அருகே குடும்ப தகராறில் புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதியை சேர்ந்தவர் ராக்கிமுத்து. இவரது  மகள் பிரியதர்ஷினி (19). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் மகன் சந்திரன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் தம்பதி இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் தம்பதியினர் சின்னகரடில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். அரசூர் குள்ளம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சந்திரனும், பிரியதர்ஷினியும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர், சிறிது நேரத்தில் 2 பேரும் உறங்குவதற்காக சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சந்திரனும், பிரியதர்ஷினியும் பிணமாக மிதப்பதாக தகவல் பரவியது. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், அரசூர் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள தம்பதி இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மனமுடைந்த பிரியதர்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கொலை செய்து கொள்வதை பார்த்த சக்திவேலுவும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. எனினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News