அரசு தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைப்பதால் தமிழர்கள் பாதிப்பு
அரசு வழங்கிய நோட்டீஸ்.
Tea Plantation Workers -நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறுகையில், இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் தான் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கிறார்கள் என்றால், இங்கே அதைவிட கொடூரம். பரந்து விரிந்து கிடக்கும் நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட வரலாற்றில், இலங்கை மலையகமான நுவரேலியாவில் இருந்து, 1964 காலகட்டங்களில் இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கை அதிபராகயிருந்த சிரிமாவோ பண்டாரநாயக நாயகாவிற்குமிடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 லட்சத்து 29 ஆயிரம் பேர் இந்தியா திரும்பினர். இவர்கள் எல்லாம் ஆங்கிலேய வியாபாரிகளால் 1800 களின் தொடக்கத்தில், புதுக்கோட்டை, மதுரை, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு தேயிலை பயிரிட அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.
ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல், இலங்கையின் தென்பகுதியான நுவரேலியாவில் உள்ள மலைகளை தங்கள் கடும் உழைப்பால் செப்பனிட்டு, அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியவர்கள்.
(அப்படி தாயகம் திரும்பிய தமிழர்களில் ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் தான் பின் நாட்களில், தன்னுடைய மாயாஜால சுழல் பந்து வீச்சால் உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்னை நோக்கி திரும்ப வைத்த முத்தையா முரளிதரன்)
ஆனால் அவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததால், 1958 ல் அவர்களது குடியுரிமையை பறித்த இலங்கை அரசு, அன்றைக்கு இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரியை அழைத்து, கணிசமானோரை இந்தியாவிற்கு அழைத்துக் கொள்ள பணித்தது.
அந்த அடிப்படையில் ராமானுஜம் என்கிற கப்பலில் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வந்து சேர்ந்த இந்த தமிழர்களை, REPARTIATES என்கிற வகையின் கீழ் கொண்டு வந்தது. அப்படி இந்தியாவிற்கு வந்த 100 சதவீதம் பேரில், 75 சதவீதம் பேர் தமிழகத்தில் தங்கிக்கொண்டனர். கொஞ்சம் பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு பகுதிகளிலும், மடிக்கேரி மலை வாசஸ்தலத்திலும், காப்பி மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தபட்டனர்.
ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களுக்கும் கணிசமானோர் அனுப்பி வைக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அன்றைக்கு தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. தாய் உள்ளத்தோடு தாயகம் திரும்பிய தமிழர்களை நடத்த நினைத்த அவர், அவர்களுக்காக நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உருவாக்கியது தான் TANTEA. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த டேன் டீ, நிர்வாகத்தை முழுமையாக நிறைவு செய்தவர் முதல்வர் கலைஞர்.
கிட்டத்தட்ட 55,000 ஹெக்டேர்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த டேன் டீ நிர்வாகத்தில், ஆரம்ப காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தார்கள். பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டித் தந்த நிர்வாகம், ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் பின்னடைவுக்கு சென்றது.
ஊட்டி தேயிலைக்கு சர்வதேச அளவில் பெரிய அளவுக்கு தேவை இருந்தும், நிர்வாக சீரழிவால் சந்தையை கோட்டை விட்டது டேன் டீ நிர்வாகம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மட்டும், தாயகம் திரும்பிய தமிழர்கள் 60 விழுக்காடு இருக்கிறார்கள். இவர்கள் மட்டும் இங்கு குடி அமர்த்தப்படவில்லை என்றால் இன்றைக்கு அங்கு ஒரு மலையாள எம்எல்ஏ, கூடலூர் சட்டமன்றத் தொகுதியை அலங்கரித்து இருப்பார். அந்த அளவிற்கு கூடலூர் நகரம் முதல் தாளூர் எல்லை வரை மலையாள ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.
எப்படியாவது டேன் டீ நிர்வாகத்தை ஒழித்துக் கட்டினால், மலையாள ஆதிக்கத்தை நிலை நிறுத்தி விட முடியும் என்று களத்தில் இறங்கிய கும்பல்கள் தான், டேன் டீ நிர்வாகத்திற்கு எதிராக வேலை செய்கிறதோ என்கிற சந்தேகமும் இருக்கிறது.
இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக டேன் டீ செயலிழந்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் ஏற்பட்ட, யானை மனித மோதலில் எட்டு பேர் மாண்டு போயினர்.
அதையே காரணமாக வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு யானை மனித மோதல் நடக்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அந்த அடிப்படையில் வால்பாறையில் மொத்தமுள்ள 6,780 ஏக்கர் தேயிலை தோட்டத்தில்,4000 ஏக்கரை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தது இப்போதைய தமிழக அரசு.
வால்பாறையில் ஏற்கனவே மலையாள ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. கேரளாவில் உள்ள சாலக்குடியில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக வரும் காட்டுப்பாதை வழியாக பயணித்து வால்பாறைக்கு வந்து சேரும் மலையாளிகளின் எண்ணிக்கை, இன்றைக்கு கிட்டத்தட்ட அந்த நகரத்தையே மலையாளமயமாக்கி இருக்கிறது.
வால்பாறையில் டேன் டீ நிர்வாகத்தில் பணி செய்து வந்த தொழிலாளிகள், 50 வயதுக்கு மேல் இருந்தால் 3 லட்ச ரூபாய் இழப்பீடு பெற்றுக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு செல்லலாம் என்றும், 50 வயதுக்கு கீழே இருக்கும் தொழிலாளிகள் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது அரசு.
மொத்தம் உள்ள டேன் டீ நிர்வாகத்தின் 8 அலகுகளில், வால்பாறை மற்றும் நடுவட்டம் ஆகிய இரண்டு அலகுகளையும் மூட முடிவு செய்து, 5,317 ஏக்கர் தேயிலை தோட்டங்களை, வனத்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறது தமிழக அரசு.
மொத்தமுள்ள தேயிலை தோட்டங்களில் வனத்துறைக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட நிலத்தின் பரப்பு கிட்டத்தட்ட ஐந்து சதவீதத்திற்கும் மேல்...இதே நீலகிரி மாவட்டத்தில் உள்ள 102 தனியார் தேயிலை தோட்டங்கள் பெருத்த லாபத்தில் இயங்கும் நிலையில், அரசு நடத்திய தேயிலைத் தோட்ட நிர்வாகம் மட்டும் நஷ்டத்திற்கு வந்தது ஏன்...?
நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இந்த விடயத்தில் மிகத் தீவிரமாக தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு காட்டிய ஆர்வம் என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தாயகம் விரும்பிய தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது என்ற கேள்வியும் பிறக்கிறது.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை லாபத்தில் இயக்குவதற்கு அரசு முயற்சித்திருக்கலாம். சீரழிந்து கிடக்கும் நிர்வாகத்தை சீர் செய்திருக்கலாம், அதை விடுத்து ஒட்டுமொத்தமாக இரண்டு அலகுகளை மூடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் ஒட்டுவதும், தொழிலாளிகளை மிரட்டுவதும், வீட்டை காலி செய்யச் சொல்லி துன்புறுத்துவதும் ஒரு அரசுக்கு அழகு அல்ல. தமிழக முதல்வர் எத்தனையோ நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த நல்ல காரியத்தில் ஒன்றாக நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் பணி புரியும் அப்பாவி தாயகம் திரும்பிய தமிழர்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வால்பாறையும் நீலகிரியையும் கைப்பற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக துடித்துக் கொண்டிருக்கும் மலையாளிகள், இதற்குப் பின்னால் இருக்கிறார்களா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. டேன் டீ நிர்வாகத்தில் எத்தனை மலையாளிகள் அதிகாரிகளாக பணி புரிந்தார்கள் என்கிற ஆய்விலும் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தேயிலைத் தோட்ட நிலங்களை மீண்டும் அரசு திரும்ப பெற வேண்டும்.
வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுவட்டம் ஆகிய இரண்டு டேன் டீ அலகுகளின் செயல்பாட்டையும் தொடர ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu