தேனி தொகுதியில் போட்டி டி.டி.வி., தினகரன் அறிவிப்பு
தேனியில் நடந்த ஜெ பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
Ammk Leader Theni Meeting Speech
தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. டி.டி.வி., தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத், அ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கதிர்காமு உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓ.பி.எஸ்., பேசியதாவது: பழனிச்சாமி என்ன தியாகம் செய்தார். குறுக்கு வழியில் அ.தி.மு.க.,வை கைப்பற்றி விட்டார். இதற்காக எம்.ஜி.ஆர்., உருவாக்கிய விதிகளை கூட மாற்றி விட்டார். அவர் ஒரு ராஜதுரோகி. மக்கள் பழனிச்சாமியை மன்னிக்க மாட்டார்கள். அவரது வேட்பாளர்கள் அத்தனை பேரும் இந்த தேர்தலில் டெபாஸிட் இழப்பார்கள். அந்த அளவு மக்கள் பழனிச்சாமி மீது கோபமாக உள்ளனர். நான் நடத்தி வந்த தர்மயுத்தத்தில் தற்போது டி.டி.வி.,யும் இணைந்துள்ளார். எனவே தர்மயுத்தம், தர்மபோராக மாறி உள்ளது. இந்த போரில் பழனிச்சாமியை வீழ்த்துவோம். விரைவில் பழனிச்சாமி இல்லாத அ.தி.மு.க., உருவாகும். அதன் பின்னர் பழனிச்சாமி எங்கிருப்பார் என்பதே யாருக்கும் தெரியாது. இவ்வாறு பேசினார்.
டி.டி.வி., தினகரன் பேசியதாவது: அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கவே நானும் ஓ.பி.எஸ்.,சும் ஒன்று சேர்ந்துள்ளோம். நானும், ஓ.பி.எஸ்.,சும் சொன்னதை செய்வோம் என்பது இந்த தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும். அம்மா என்ற அன்பு சங்கிலி தான் என்னையும், ஓ.பி.எஸ்.,ஐயும் ஒன்று சேர்த்துள்ளது. நான் பிறந்தது தஞ்சாவூர் என்றாலும், என் அரசியல் வாழ்க்கை தொடங்கியது தேனியில் தான். தேனி லோக்சபா தொகுதியில் 1999ம் ஆண்டு நான் வெற்றி பெற்றேன். தொகுதிக்கு தேவையான அத்தனையும் செய்தேன். ஜெ., நான் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார். அப்போது என்னுடன் இருந்தவர்கள் சில காலம் விலகியிருந்தாலும், இப்போது மீண்டும் என்னுடன் வந்து விட்டனர்.
தேனி தொகுதியில் 1999ல் வென்ற நான் 2004ல் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டேன். இருப்பினும் தேனி தொகுதிக்கும் எனக்கும் இடையே தொடர்பு இருந்து கொண்டு தான் உள்ளது. நான் எதைக் கேட்டாலும் ஜெ., செய்தார். நான் அடுத்து ராஜ்யசபா உறுப்பினராக இருந்த காலத்திலும் தேனி தொகுதிக்கு நிறைய செய்துள்ளேன். தற்போது இ.பி.எஸ்., உடன் இருக்கும் திண்டுக்கல் காமெடியன் கூட அண்ணே நீங்க சொன்னால் அம்மா சட்டமன்ற கூட்டத்தொடரை கூட தேனியில் நடத்த அனுமதிப்பார்கள் என பெருமையாக கூறுவார்.
இப்படிப்பட்ட தேனி தொகுதியில் மீண்டும் ஏன் போட்டியிடவில்லை. கடந்த முறை ஏன் வெளியில் போட்டியிட்டீர்கள் என பலரும் என்னை கேட்கின்றனர். நான் தேனி தொகுதியில் கட்டாயம் போட்டியிடுவேன். அது எப்போது என்பதை நான் தான் முடிவு செய்வேன். இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu