/* */

ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேசிய கல்விக் கொள்கையை நுழைக்கும் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராடும்

HIGHLIGHTS

ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது:  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
X

ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு ஆசிரியர்களை முழுமையான கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமெனவும், பயிற்சி தொடர்பாக ஊடகங்களில் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில், தவறான செய்திகள் வெளியிடப்படுவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் உடனடியாக உரிய விளக்கம் அளித்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-22 -ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே, இதுவரை வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. அதுவும் இக்காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறைச்சுழலுக்குக் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளது.

இச்சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் அனைத்து வகைப்பள்ளிகளும் திறக்கப்பட்டுக் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி முடிய 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்' பயிற்சி நடத்தப்பட்டது. குடிப்பதற்கு 'பச்சைத் தண்ணீர்' கூட கொடுக்காத பயிற்சி என்று பெயர் பெற்ற அப்பயிற்சி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 09.02.2022 முதல் 09.04.2022 வரை இரண்டு மாத காலம் 'எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி' என்ற பெயரில் இணைய வழியில் பயிற்சி அளிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சியின் மீது சலிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள 'எண்ணும் எழுத்தும் அடிப்படைப்பயிற்சி' ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'அ, ஆ தெரியுமா? கூட்டல் கழித்தல் தெரியுமா? என்பதை சோதிக்கும் பயிற்சி' என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பயிற்சியின் நோக்கம், காரணம், பயிற்சிக்கான பாடப்பொருள் ஆகியவை பற்றி மாநில திட்ட இயக்ககம் தெளிவான விளக்கத்தை அளித்திட வேண்டும். ஆரம்பப்பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்கள்தான் எண்ணும் எழுத்தும் தெரியாதவர்கள். அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மெத்தப் படித்தவர்கள், பெரும்பாலும் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும், இப்பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சிக் கட்டகத்தின் முடிவிலும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயிற்சிக்கான செலவினமும் வழங்கப்படும் எனவும் மாநில திட்டஇயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனையடையச் செய்துள்ளது.

ஆசிரியர்களுக்குத் தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக்கொள்கை 2020ன் உள்கூறுகள் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது. தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கும் இது போன்ற செயல்கள் தொடருமானால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை எதிர்த்து களத்தில் இறங்கிப் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார் அவர் .

Updated On: 10 Feb 2022 3:56 AM GMT

Related News