/* */

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி

தைப்பூச தீர்த்தவாரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதுமணத்தம்பதியர் பங்கேற்று தீர்த்தமாடினர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
X

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் நடைபெற்ற தைப்பூச தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டை,புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தலவரலாறு:புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில் சஞ்சரிக்க விரும்பி பூவுலகை வலம் வந்தனர். அப்போது வெள்ளாற்றின்(சுவேத நதி) அழகில் மயங்கி இந்த இடத்தில் வந்து இறங்கி நதியில் நீராடி மகிழ்ந்து மீண்டும் கைலாயம் சென்றனர்.சிவனும், பார்வதியும் நதியில் நீராடிய நாள் தைத்திங்கள் பூச நட்சத்திர வேளையாகும்.

அதனால் இதைப் போற்றும் வகையில், மாவட்டத்தில் சப்த ஸ்தலங்களில் வீற்றிருக்கும் சிவாலங்களிலில் இருந்து அம்பாள், சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வந்து வெள்ளாற்றில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. மேலும், இதே நாளில் புதுமணத் தம்பதிகள் நீராடினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தம்பதிகள் நீராடுவது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக, நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சியில், திருவேங்கை வாசல் பெரியநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர், திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர், திருமயம் வேணுவனேஸ்வரி சமேத சத்தியகிரீஸ்வரர், கோட்டூர் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர், விராச்சிலை சௌந்தர நாயகி சமேத வில்வவனேஸ்வரர் ஆகிய ஆலயங்களில் இருந்து சப்பரத்தில் எடுத்துவரப்பட்ட உற்சவ மூர்த்திகள் வெள்ளாற்றில் தீர்த்தமாடும் வைபவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா , அறங்காவலர் குழு தலைவர் செந்திகுமார், செயல்அலுவலர் முத்துராமன் ஆலய மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் மாரிமுத்து, ஆய்வாளர்கள் புவனேஸ்வரி, திவ்யாபாரதி, துரைச்சாமி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Updated On: 5 Feb 2023 5:30 PM GMT

Related News