புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் – ஆசிரியர் மன்றத்தின் கடும் கண்டனம்
கட்டாய புத்தக திருவிழா வசூல்: ஆசிரியர் மன்றம் போராட்டம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா பெயரில் நடைபெறும் கட்டாய பண வசூலை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. மன்றத்தின் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூன்றாவது புத்தகத் திருவிழா வரும் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவில் மாவட்டத்தின் ஒவ்வொரு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிடமிருந்தும் தலா ரூ.500 வசூலிக்கப்பட்டு, பின்னர் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
"இந்த ஆண்டு நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தாமல், மேலிட உத்தரவு என்ற பெயரில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாய வசூல் நடத்துகின்றனர்," என ஆசிரியர் மன்றத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
"தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சங்கங்களின் கருத்துக்களை கேட்காமல் இவ்வாறு கட்டாய வசூல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. புத்தகத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசே நிதி ஒதுக்கீடு செய்கிறது," என மன்றத்தின் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்து நாளை மாலை 5 மணிக்கு நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. "கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்," என ஆசிரியர் மன்றத்தினர் எச்சரித்துள்ளனர்.
"கட்டாய வசூல் நிறுத்தப்பட வேண்டும். புத்தகத் திருவிழா நடத்துவதற்கான செலவினங்களை மாவட்ட நிர்வாகமே ஏற்க வேண்டும்," என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu