நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி பஸ்கள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், தனியார் பள்ளி பஸ்களை கலெக்டர் உமா, பார்வைவிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்,
தமிழ்நாடு அரசு அனைத்து பள்ளி பஸ்களுக்கும் ஒவ்வொரு கல்வி ஆண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாக மாவட்ட அளவிலான குழு மூலம் பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் (வடக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) ஆர்டிஓ அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்கள், நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதி வாய்ந்த டிரைவர், உதவியாளர்,மாணவ, மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டுக்கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்.சி, பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு, உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிஇஓ மகேஸ்வரி, ஆர்டிஓ முருகேசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu