தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
X
உழவர் சந்தை விவசாயிகள், நடைபாதை வியாபாரத்தை தடுக்க கோரி, காய்கறிகளை தரையில் கொட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கி வரும் உழவர் சந்தையில், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், அடையாள அட்டையுடன் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், சந்தைக்கு செல்லும் முக்கிய வழிகளில் நடைப்பாதை வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்வதால், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் குறைவடைந்து, விவசாயிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதற்கான தீர்வுக்காக விவசாயிகள் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுப்பியும், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால், நேற்று அதிகாலை 5:00 மணி அளவில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை சந்தைக்குள் தரையில் கொட்டி வைத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நடைபாதை வியாபாரிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் சந்தை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தர்ணா தகவல் அறிந்த தாராபுரம் போலீசார், விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திரவியம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே ஆலோசனை நடைபெற்றது. அதிகாரிகள், காலை 9:00 மணி வரை, நடைப்பாதை வியாபாரிகளுக்கு வியாபாரத் தடை விதிக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Tags

Next Story