விவசாயிகள் கோடை உழவு செய்த பின், விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்ய ஆலோசனை

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் விதைச்சான்றளிப்புத்துறை, விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தேவிப்பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தற்போது ஆங்காங்கு மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மழைநீர் நன்கு நிலத்தில் ஊடுருவி நிலத்தின் அடிப்பகுதிக்குச் சென்று அடிப்பகுதியில் தங்கும், இதன்மூலம் நிலத்தின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. உழவு செய்யப்படாத நிலத்தில் மேற்புறம் இருகி காணப்படுவதால் நீர் உட்புகாது. கோடை உழவு செய்வதால் நிலத்திலுள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள் மற்றும் களைச் செடிகளின் விதைகள் நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல்புறத்திற்கு கொண்டு வரப்படுவதால், அதிக வெப்ப நிலையின் காரணமாக அவைகள் அழிக்கப்படுகின்றன. கோடை உழவினை சரிவுக்கு குறுக்காக உழ வேண்டும். இதனால் கோரை போன்ற கிழங்கு வகை களைகள் பிடுங்கப்பட்டு, களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
கோடை உழவினால் அறுவடை போக எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகள், களைச்செடிகளின் எஞ்சிய பகுதிகள் நிலத்தில் மடக்கி உழப்படுவதால் நன்கு மட்கி பயிருக்கு தேவையான சத்துக்களை அளிப்பதால் மகசூலும், நிலத்தின் மண்வளமும் அதிகரிக்கிறது. மண்வளமும், மகசூலும் அதிகரிக்கும் என்பதால் கோடை உழவினை பருவம் தவறாது உடன் மேற்கொள்ள வேண்டும்.
நல்விதையே நல்விளைச்சலுக்கு வித்தாகும், எனவே விவசாயிகள் பயன்படுத்தும் விதைகள் சரியான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஆகவே விவசாயிகள் தங்களின் விதைகளின் தரத்தை அறிய, கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ. 80 கட்டணம் செலுத்தி, விதைப்பரிசோதனை செய்து, முளைப்புத்திறன் அறிந்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu