குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு :சேர்மன் பங்கேற்பு
குமாரபாளையம் ஜே.கே.கே.சுந்தரம் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நான்கு வகுப்பறைகளை சேர்மன் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குமாரபாளையம் நகராட்சி பள்ளி புதிய வகுப்பறைகளை சேர்மன் திறந்து வைத்தார்.
குமாரபாளையம் ஜே.கே.கே.சுந்தரம் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒசாட் பொதுநல அமைப்பினர் சார்பில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒசாட் நிர்வாகிகள், தலைமை ஆசிரியை புஷ்பலதா, கவுன்சிலர் கதிரவன் சேகர், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி கல்வி நிதியின் மூலம் 18.25 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்து ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். இங்குள்ள இருக்கைகளும் நவீன முறையில் அமைக்கபட்டுள்ளன. மாணவர்களிடையே விஜய்கண்ணன் பேசியதாவது:
மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நகராட்சி சார்பில் செய்து தரப்படும். ஆனால் மாணவ, மாணவியர் இது போன்ற நவீன தொழில்நுட்பங்களை நன்கு கற்றறிந்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமான நிலையில் இருந்தது. இதனை புதிய கட்டிடமாக மாற்றக்கோரி அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அப்பகுதியை சேர்ந்த உமா, ராஜீவ் ராமசாமி மற்றும் ஒசாட் பொது நல அமைப்பினர் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள் கட்டிடம் கட்டி கொடுத்தனர். அதன் திறப்பு விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர். கட்டிடம் கட்டி கொடுத்தவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பேசியதாவது: அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டும், என்ற நல்ல எண்ணம் கொண்டு இந்த கட்டிடம் கட்டி கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள். பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டி கொடுப்பதையே லட்சியமாக கொண்டு செயல்படுவது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
பி.டி.ஏ.நிர்வாகி ரவி, நகரில் உள்ள இதர நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu