திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கரடிக்கள் ஊராட்சி செட்டிகுளம் கிராமத்தில் அரசு பள்ளி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம் கரடிக்கள் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் பெருமாள்பட்டி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்தப் பள்ளியானது அரசு உதவி பெறும் பள்ளியாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பள்ளி கட்டிடம் மிக மோசமான நிலையில் இருப்பதாக கூறி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து டிசி வாங்கி சென்று அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி கூறினர்.
மேலும் இது குறித்து கிராம பொதுமக்கள் தொடக்கக்கல்வி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு மூல காரணமாக இருப்பது அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் தான் என்றும் ஆகையால் உடனடியாக நிர்வாகத்தை கலைத்து விட்டு அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று சேருவதை தடுக்கும் வகையில் மாற்று வழியை கையாள வேண்டும். அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்வதால் சுமார் 6 கிலோ மீட்டர் வரை சிறு குழந்தைகள் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. பேருந்து வசதி இல்லாத இந்த கிராமத்தில் இருந்து நடந்து செல்வது சிறு குழந்தைகளுக்கு மிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த பள்ளி முழுமையாக செயல்பட கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu