பிளாஸ்டிக் கயிறு தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

ஈரோடு : ஈரோடு அருகே கயிறு தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், இயந்திரம் எரிந்து நாசமானது.
ஈரோடு அருகே மாமரத்துப்பாளையம் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தை ஹரி சிங், கிருஷ்ணா பிளாஸ்டிக் பெயரில் பிளாஸ்டிக் கயிறு (டொயின்) தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். மூன்றாயிரம் சதுர அடி பரப்பில் சிமெண்ட் ஓட்டினால் ஆன கூரையுடன் இயங்கி வந்தது.
இங்கு பிளாஸ்டிக் பொருள், சாக்கு, பழைய கயிறுகளை மறுசூழற்சி செய்து பிளாஸ்டிக் கயிறு தயாரித்து வந்தனர். ஏழு தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை, 4:00 மணியளவில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் கூச்சலிட்டவாறே வெளியில் ஓடி வந்தனர்.
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைக்க முற்பட்டனர். தீ கட்டுக்குள் வராததால், ஈரோட்டில் இருந்து மேலும் ஒரு வாகனமும், பவானி மற்றும் பெருந்துறையில் இருந்தும் தலா ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நான்கு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். இதில் பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் இயந்திரம், விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கயிறு, குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் என, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தெரிகிறது.மின் கசிவால் தீப்பிடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu