தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சீமான் வலியுறுத்தல்
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்:
மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. அவளின் பேரன் நான் வந்தால் அவளுக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி, தமிழக ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன். ஒரே நாள் இரவில் மொத்த சிலைகளையும் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.
நீங்கள் எனக்கு ஓட்டு போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களை உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.அப்போது, சீமானை தேடுவீர்கள் இது நடக்கும். சாதி வாரி கணக்கெடுப்பை தாமதமின்றி நடத்த வேண்டும். முக்குலத்தோருக்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் கள்ளர் எத்தனை பேர், மறவர் எத்தனை பேர், அகமுடையார் எத்தனை பேர் என எண்ணி வலிமைக்கேற்ப அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும்.
கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள். இது என்ன இட ஒதுக்கீடு, சமூக நீதி. எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும் என்றார் சீமான் இதில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏன்...
1871ம் ஆண்டில்தான் இந்த நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. பின்னர் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கொரு முறை 1871 முதல் 1921 வரை மக்களின் மதம் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டன. முதன் முறையாக 1931ல் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சாதியிலும் இருக்கும் மக்கள் தொகை புள்ளி விவரம் தொகுக்கப்பட்டது.
1931ல் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் SC / ST மக்களுக்கு கல்வியிலும் அரசு வேலைகளிலும், சட்டமன்ற, ஊராட்சிமன்றத் தொகுதிகளிலும் தனி இடஓதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர் அம்பேத்கரும், "தாத்தா" ரெட்டைமலை சீனிவாசனும் வலியுறுத்தினார்கள். ஆங்கிலேயே அரசும் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தில் நடந்துவந்ததால் 1941ல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 1951, 1961களில் நேரு ஆட்சியிலிருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பை ஆட்சியில் பெரும்பான்மையினராக இருந்த ஆதிக்க உயர் சாதியினர் அனுமதிக்கவில்லை.
1971, 1981, 1991, 2001ம் ஆண்டுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. ஆனால் மக்களின் சாதி பற்றிய புள்ளி விவரங்கள் தொகுக்கப்படவில்லை. 1931க்குப் பிறகு 80 ஆண்டுகள் கழித்து 2-வதுமுறையாக 2011ல் மக்களின் மதங்களுடன், அவர்கள் பிறந்த சாதியின் விவரங்களும் திரட்டப்பட்டன.
மக்களின் மதங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் 2014 மார்ச் மாதமே தயாராக இருந்தும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அரசியல் காரணங்களுக்காக மன்மோகன்சிங் அரசு அதை வெளியிடவில்லை. 2014 மே 8ம் நாள் ஆட்சிக்கு வந்த மோடி அரசும் அவற்றை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. பிகார் தேர்தல் களம் சூடுபிடித்து விட்டதால், மதங்களின் அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்தும் தேர்தல் ஆதாயத்துக்காக திடீரென 2015 ஆகஸ்ட் 24ம் நாள் 2011ம் வருடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கப்பெற்ற மதவாரிப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2011ம் ஆண்டு நிலவரப்படி இந்திய மக்கள் தொகை 121.09 கோடி
இந்துமதத்தினர் - 96.63 கோடி - 79.8%
இஸ்லாமியர் - 17.22 கோடி - 14.2%
கிறிஸ்துவர்கள் - 2.78 கோடி - 2.3%
சீக்கியர்கள் - 2.08 கோடி - 1.7%
புத்த மதத்தினர் - 0.84 கோடி - 0.7%
ஜைன மதத்தினர் - 0.45 கோடி - 0.4%
மற்ற மதத்தினர் - 0.79 கோடி - 0.7%
மதமே இல்லாதவர்கள் - 0.29 கோடி - 0.2%
2011 சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் தவறுகளை திருத்தும் சாக்கில், உண்மையான புள்ளி விவரங்களை வெளியிடாமல் ஒத்திப்போடும் தந்திரத்தை மத்திய அரசு கையாள்கிறது என்ற குற்றச்சாட்டை பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் முன் வைக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu