மதுரை மாநகராட்சியில் மேயர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதி ஏற்பு
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிசார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் இன்று (09.02.2023) அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும் வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும் கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும்,
கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகைசெய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன் என மேயர் வாசிக்க, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ,துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu