காஞ்சிபுரத்தில் குளம் மற்றும் பசுமை பூங்காக்களுடன் புதிய நவீன தகன மேடை
நாகலத்து மேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன மின்தகன மேடை பணிகளை ஆய்வு செய்யும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடன் பணிக்குழு தலைவர் சுரேஷ் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் , பூங்கொடி தசரதன்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் நாகலத்து பகுதியில் கட்டப்பட்டு வரும் நவீன மின் தகன மேடை சுற்றிலும் குளம் மற்றும் பசுமை பூங்காக்களும் மக்கள் பங்களிப்புடன் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சார்பில் மரணமடைந்த நபர்களின் இறுதி சடங்கிற்காக நவீன மின் தகன மேடை ஏற்கனவே தாயார்குளம் மற்றும் சர்வதீர்த்தகுளம் அருகே செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் மேலும் சின்ன காஞ்சிபுரம் 31-வது வார்டு பகுதியான நாகலத்துமேடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புடன் கூடிய புதிய நவீன தகனமேடை அமைக்க திட்டமிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் துவக்கப்பட்டது.
இதில் பொதுமக்களின் பங்களிப்பாக 60 லட்சமும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் பங்காக ரூ 1 கோடியே 40 லட்சமும் இணைந்து 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது 40 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று இதனை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மூன்றாவது மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், பணி குழு தலைவர் சுரேஷ் , மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் , பூங்கொடி தசரதன் உள்ளிட்டோருடன் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு மாநகராட்சி பொறியாளர் கணேசன் முடிவுற்ற பணிகளும் இனி நடைபெற உள்ள பணிகள் குறித்து மாநகராட்சி மேயருக்கு விளக்கம் அளித்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் , தமிழக முதலமைச்சரின் அறிவுரையின்படியும் , முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின் பேரிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் நவீன மின் தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது மட்டும் இல்லாமல் இதன் அருகில் உள்ள குளம் தூர் வாரப்பட்டும் , அதனை சுற்றி நடை பாதைகள் , பசுமை பூங்கா , வாகன நிறுத்துமிடம் என தனியாக பொதுமக்கள் பங்களிப்புடன் , சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் நிறைந்த வளாகமாக இந்த இடம் மாற்றப்பட உள்ளதாகவும் இந்த பணிகள் அனைத்தும் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu