விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு தயாராக உள்ளது.
சதுர்த்தி விழாவிற்கு 6 நாட்களே உள்ள நிலையில், ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோட்டில் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, மீனாட்சிசுந்தரனார் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
யாழி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர் , கருட வாகன விநாயகர், சித்தி புத்தி விநாயகர் , ஆஞ்சநேய விநாயகர் , சிவன் பார்வதியுடன் உள்ள விநாயகர் என 150 வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன.
3 அடி முதல் 10 அடி வரை உள்ள இந்த சிலைகள், விலை ரூ.200 முதல் ரூ. 15,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இப்போதே விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும், விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு சிலர் முன்பதிவு செய்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மழை மற்றும் தூசிகளால் பாதிக்காமல் இருக்க, அந்த சிலைகளை பிளாஸ்டிக் கவர்களால் மூடி வைத்துள்ளனர். இது தவிர, களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள் ரூ.10 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோன்று, பவானி அடுத்த வாய்க்கால் மேட்டில், ராஜஸ்தான் தொழிலாளர்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu