அந்தியூர் பகுதியில் கள்ளச்சாராயம்? மலைக்கிராம மக்களிடம் போலீசார் விசாரணை
அந்தியூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை மற்றும் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்.
Erode News, Erode Live Updates - அந்தியூர் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என மலைக்கிராம மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்தனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தியூரில் மலைக்கிராம பகுதியான மலை கருப்புசாமி கோவில் பகுதி, ஈச்சம்பாறை, பெருமாள்பாளையம், குண்டுபுளியாமரம், நகலூர், அண்ணமார்பாளையம் உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுகிறதா? மற்றும் மது விற்கப்படுகிறதா? என்பது குறித்து அந்தியூர் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடமும் விசாரித்தனர். அவர்களிடம், சாராயம் ஏதாவது விற்பனை செய்தாலோ, காய்ச்சினாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu