ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது!

ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது!
X
ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு : ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரன் (45), பாஸ்கர் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு சந்தைக்கு லாரியில் கடந்த 7-ஆம் தேதி இரவு தக்காளி கொண்டு வந்தனர்.

பின்னர் அவற்றை இறக்கிவிட்டு சந்தை அருகே லாரியை நிறுத்தி தூங்கினர். அப்போது இரவில் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி ஆகியோரை 4 இளைஞர்கள் எழுப்பி, கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளனர்.

கூகுள் பே மூலம் ரூ.18,700 பறிப்பு

அப்போது லாரி ஓட்டுநர்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை எனக் கூறவே கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த கைப்பேசியை பறித்து வங்கிக் கணக்குக்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பிவைத்து, கைப்பேசியில் இருந்து கூகுள் பே செயலியை அழித்துவிட்டு சென்றுவிட்டனர்.இதையடுத்து மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி இருவரும் சந்தையில் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளர் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுநர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன்சத்திரம், மிட்டாய்காரர் வீதியைச் சேர்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.மேலும் பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story