போலி அதிர்ஷ்ட கல் விற்க முயற்சி-22 பேர் கைது
பொள்ளாச்சியில் சினிமா பாணியில் போலியான அதிர்ஷ்ட கல்விற்க முயற்சி செய்த மோசடி கும்பல் சுற்றி வளைக்கப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட எஸ்பி., அருளரசு உத்தரவின் பெயரில் டிஎஸ்பி., சிவக்குமார் தலைமையில் பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் விடுதிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்தும் தனிப்படை அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் செல்போன் கடை நடத்தி வரும் ரியாஸ் என்பவரது கடைக்கு வந்த மூக்கையா, ராஜ்குமார், மந்திரி ஆகிய மூவரும் ரியாசிடம், விலை மதிப்பற்ற அதிர்ஷ்ட கல் 5 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும், அந்த கல்லினால் அதிர்ஷ்டம் பெருகும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 500 மற்றும் 1000 தந்தால் பத்து மடங்கு புதிய நோட்டு தருவதாகவும், தங்களுக்கு வங்கிகளில் மேலாளர்களிடம் நல்ல பழக்கம் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மூவரும் கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் செல்போனில் பேசி பொள்ளாச்சியை அடுத்து உள்ள குஞ்சிபாளையம் சுடுகாடு அருகே ரியாசை வருமாறு கூறி 5 லட்ச ரூபாய் தந்தால், அதிர்ஷ்ட கல்லினை தருவதாக கூறியுள்ளனர். அதற்கு ரியாஸ் நீங்கள் முதலில் அதிர்ஷ்ட கல்லினை காட்ட வேண்டும் என தெரிவித்ததால், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரியாஸ் ஆகியோர் அந்த நான்கு பேரை பிடித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த மோசடி கும்பல் நவரத்தினக் கல், அதிர்ஷ்ட கற்களை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் போலியான தங்க பிஸ்கட் என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது, பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சந்தேகத்துக்கிடமாக கேரளாவைச் சேர்ந்த நபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து போலீசார் 18 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த நவீன் ஆனந்த், நூறுதீன், சுனில், ரஜீஸ் அஜீஸ் பட்டேல், சுதீஸ், பைசல், அனில்குமார், சாகத், தினேஷ், இசாக், சந்திரன், வினோத், சந்தோஷ், சோஜன், அனூப், விஷ்ணு, அக்சோ, பாசில் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் ஏற்கனவே ரியாசை ஏமாற்ற முயற்சி செய்தது இக்கும்பல் என தெரியவந்தது. மோசடி கும்பல் பயன்படுத்திய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 18 பேர் என 22 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu