‘பக்தி’ என்றால் உண்மையில் என்ன? - தெரிந்து கொள்வோம் வாங்க!

‘பக்தி’ என்றால் உண்மையில் என்ன? - தெரிந்து கொள்வோம் வாங்க!
X

பக்தி என்பதன் உண்மையான அர்த்தம் அறிவோம். (கோப்பு படம்)

‘அன்பே கடவுள்’ - இது வார்த்தை அல்ல, நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படையே இதுதான். ஆனால், கடவுளை மட்டுமே வழிபடும் நாம், அன்பை மறந்து விடுகிறோம் என்பதுதான் இதில் முரண்பாடு.

பக்தி என்பது கோவில்களுக்குச் சென்று இறைவனை வேண்டுதல், உண்டியலில் காணிக்கை இடுதல், விரதம் இருத்தல், அவரவர் தங்கள் மதம்சார்ந்த சடங்குகளை அனுசரித்தல், பண்டிகைகளைக் கொண்டாடுதல், தோத்திரப் பாடல்களை முணுமுணுத்தல் - இவையே பக்திக்குரிய செயற்பாடுகள் என்பதுதான் நம்மில் பலரின் நம்பிக்கை.


வாழ்வின் மீதான பற்றுதலை அறுத்துவிடுவதுதான் உண்மையான பக்தி என்று கருதுபவர்களும் உண்டு. உடையில் தனிப்பட்ட வித்தியாசத்தைக் காட்டுவதும் பக்தியின் ஓர் அடையாளம் என்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால், மெய்யான பக்தி என்பது இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. புறத்தோற்றங்களையும் சம்பிரதாயங்களையும் கடந்து நிற்பது. ஆன்மாவில் இருந்து புறப்பட்டுக் கருணை வெள்ளமாய் பிரபஞ்சத்தை நிரப்புவது; அன்பின் ஒளியால் அகிலத்தை ஆட்கொள்வது. மனிதநேயமே மெய்யான பக்தி.


மனதில் ஈரம் இருக்க வேண்டும். தமக்கு அடுத்திருப்பவனை நேசிக்கின்ற உள்ளம் வேண்டும். மனிதமற்ற நிலையில் போடுகிற பக்திக்கோலம் காகிதப் பூக்களைப் போன்றது. அன்புதான் பக்தியின் அடிநாதம். அதுதான் நம் வாழ்க்கையைப் பக்திபூர்வமாக்குகிறது; அழகுபடுத்துகிறது. ஒருவனை 'பக்திமான்' என்று அடையாளப்படுத்துவது, மற்றவர்களிடத்தில் அவன் காட்டுகின்ற அன்பேயன்றி, வேறொன்றுமில்லை.


'உன் சுயத்தை இழந்துவிடு; வாழ்வின் சுகங்களைப் புறந்தள்ளிவிடு. அப்படியானால்தான் இறையருளைப் பெற முடியும்' என்று சொல்பவர்களை நம்பாதீர்கள். ஏனெனில், இறையருளால் நாம் பெற்றிருப்பதுதான் இந்த வாழ்க்கை. எனவே, வாழ்க்கையை நாம் நேசிக்க வேண்டும். தன்னைத்தான் நேசிக்கத் தெரியாதவன், எப்படி மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முடியும்.


தமிழில் தோன்றிய அளவிற்கு வேறு எந்த மொழியிலும் பக்தி இலக்கியம் தோன்றவில்லை. ஆழ்வார்கள் நாயன்மார்களின் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை. கலைகள் போற்றப்படுகின்றன. உலக இன்பங்களை நுகர்ந்தவாறே பக்தி செலுத்தலாம் என்ற தெளிவை பக்தி இலக்கியம் நமக்குத் தருகிறது. இந்தப் பூமியில் நல்வாழ்வை அது வலியுறுத்துகின்றது.


நல்ல வாழ்க்கை என்பது, நல்லவர்களாய் வாழ்வது. பெற்றோரை கனப்படுத்துதல்; உடன்பிறந்தார்க்கு உதவுதல்; உறவினர்களை ஆதரித்தல்; அபயம் என்று வந்தோரை அரவணைத்தல்; பசியோடிருப்பவரின் பசியாற்றுதல்; உள்ளன்போடு பழகுதல்; பொய்பேச அஞ்சுதல்; நேர்மையாக சம்பாதித்தல்; பிறர்க்குத் தீங்கு எண்ணாமை - இவையெல்லாம் நல்வாழ்வின் உட்கூறுகள்.

பெற்ற தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க மனமில்லாதவன், கடவுளுக்கென்று கோடி கோடியாய் பணத்தைக் கொட்டுகிறான். அவன் கொட்டிய கோடிகளில் ஒரு பைசாகூட இறைவனின் சன்னதியைச் சென்றடையப் போவதில்லை. இளமைத் துடிப்புள்ள ஓர் இளைஞன் நபிகள் பெருமானாரிடம் வந்தான். இறைத்தூதரை வணங்கி, 'அறப்போருக்குச் செல்லும் படையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றான். 'உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?' என்று அவனிடம் கேட்டார் நபிகளார். 'ஆம், இறையருளால் இருவருமே உயிருடன் இருக்கிறார்கள்' என்றான் அந்த இளைஞன். 'அப்படியானால், நீ போய் உன் பெற்றோருக்குப் பணிவிடை செய்' என்று அறிவுறுத்தி, அவனை அனுப்பி வைத்தார் அண்ணல் நபிகளார்.


மற்றொரு இளைஞன். திடகாத்திரமான தேகம். தன்னை அறப்போர் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு அவனும் அண்ணல் நபிகளாரை வேண்டினான். 'உன் பெற்றோரிடம் அனுமதி வாங்கினாயா?' - அவனிடம் கேட்டார் நபிகளார். 'இல்லை' என்றான் அவன். 'உன்னை உன் தாய் எப்படி அனுப்பி வைத்தார்?' என்று மீண்டும் அவனிடம் கேட்டார் இறைத்தூதர். 'என் தாய் அழுதுகொண்டே இருந்தார். அவளின் அழுகையைப் பொருட்படுத்தாமல் நான் வந்துவிட்டேன்' என்றான் அந்த இளைஞன். 'உடனே இங்கிருந்து செல். அழுது கொண்டிருக்கும் உன் தாயை மகிழ்ச்சியில் சிரிக்கவை. பெற்றோரின் மகிழ்ச்சியில்தான் இறைவனின் மகிழ்ச்சி உள்ளது' என்றார் நபிகள் பெருமானார். எத்தனை பெரிய உண்மை! பெற்றோரை தவிக்க விட்டுவிட்டு, 'சமூக சேவை செய்கிறேன்' என்று திரிகின்றவன் யாருக்குதான் உண்மையுள்ளவனாக இருக்க முடியும்.

தர்மத்தை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அது சரியான நேரத்தில் தனது தீர்ப்பை எழுதி முடிக்கும். தாய்தந்தையைச் சேவிப்பதும், அவர்களை அன்புடன் பராமரிப்பதும்தான் உன்னதமான பக்தி.


வாழ்வில் இறையருள்; நன்மைகள் பெருக; நிம்மதிக்கு பெற்றோரை நேசிக்க வேண்டும். அந்த பக்தியில் எல்லா நலன்களும் வந்து சேரும். 'என்ன நோன்பு நோற்றாள் கொல்லோ அவனைப் பெற்ற வயிறுடையாள்' என்று எல்லோரும் போற்றிக் கொண்டாடும் சிறப்பை உடையவன் கண்ணன். அவனின் பிறப்பால் யசோதையின் வயிறு விளக்கம் பெற்றது என்பதை, 'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்' என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள். 'மக்கள் அன்புக் கயிற்றினால் என்னைக் கட்டலாம்' என்பதை உணர்த்துவதே தாமோதரன் என்னும் பெயர்.

அன்புதான் தெய்வீகம். அதுதான் மானுட மேன்மையின் ஆதாரம். கடவுளுக்கு முன் மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்பதே, ஆழ்வார்கள் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் ஏற்படுத்திய புரட்சி. ஒருவன் எப்போது பக்தியில் முதிர்ச்சி அடைகிறான் என்றால், எல்லோரும் சரிசமம் என்று எண்ணுகின்ற பக்குவத்தை அடையும்போதுதான்.


மாசுபடாத சிந்தனை வேண்டும். நேர்மையான பார்வை வேண்டும். நட்பிலும் பக்தி வேண்டும். அந்த நட்புதான் ஆயுளுக்கும் தொடர்கின்ற நட்பாக நிலைத்திருக்கும். குடும்ப வாழ்க்கை, நட்பு, தொழில், இறையச்சம், உபகாரம், உயிரினங்கள் - எல்லாவற்றின் மீதும் ஆழ்ந்த பக்தி வேண்டும். இயற்கை தரும் இன்பங்களும், கலை இன்பங்களும் இறைவன் தரும் இன்பங்களே. எனவே, எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றான் என்பதே பக்தியைப் பற்றிய சரியான புரிதல். அதுதான் உண்மையான இறைவழிபாடு. அந்த பக்தி நிலையை நாம் இன்னும் எய்திவிடவில்லை. அது ஒரு தெய்வீகத் தன்மை. அந்த நிலையை எய்திவிடக்கூடுமானால், இந்த உலகில் பஞ்சம் பசி பட்டினி, ஏற்றத்தாழ்வுகள், கொலை கொள்ளை எதுவும் இருக்காது. எல்லோரும் இன்புற்றிருப்போம். அதுதான் மெய்யான பக்தியின் ஆற்றல்.

Next Story