எண் 8 - ராசியில்லாத நம்பரா?

எட்டாம் நம்பர் பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமே!
ஒரு சிலர் 8-ம் நம்பர் வீடு நல்லதல்ல என்றும், கூட்டு எண் 8 வந்தாலும், அது சரியல்ல என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர். கூட்டு எண் 8-ஆக இருக்கும் பட்சத்தில், பெயரைக் கூட மாற்றம் செய்கின்றனர். ஆனால், பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. வாழ்க்கையில் எட்டு வைத்து முன்னேறும் போது தான், அனைத்து காரியங்களும் நடைபெறுகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டுமென்றால், நாம் '8' போட்டு (வாகனத்தை '8' எண் வடிவ பாதையில் ஓட்டிக் காண்பித்து) தான் ஆக வேண்டும். 8-ம் எண், சனியின் ஆதிக்கம் பெற்றது. சனி என்றாலே பிரச்னைதான் என்ற பொதுவான கருத்தும், இந்த எண்ணை பலரும் தவிர்ப்பதற்கு காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல, 8-ம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு இருக்கிறது. 'அஷ்டோத்திரம்' என்று சொல்லக்கூடிய மந்திரம், அஷ்ட லட்சுமிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் போன்றவை எட்டாம் எண்ணின் படி அமைந்துள்ளதைக் காணலாம். அதாவது 'அஷ்ட' என்றால் 'எட்டு' என பொருள்படும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 8-ம் எண்ணும் வலிமையானது தான். நவக்கிரகங்களிலேயே சனி பகவானுக்கு மட்டும்தான், 'ஈஸ்வர' பட்டம் கிடைத்திருக்கிறது. இதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுகிறோம். அப்படிப்பட்ட சனிக்குரிய எட்டாம் எண்ணை, எண் கணிதப்படி பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒருவரின் பிறந்த தேதியின்படி, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 8-ம் எண் ஆதிக்கம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பிறந்த தேதியின் கூட்டு எண் எட்டாக வந்தால், அவர்கள் சனியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களே. உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி '25.2.1988' என்று வைத்துக்கொள்வோம். அதன் மொத்த எண்களையும் கூட்டி (2+5+2+1+9+8+8 = 35= 3+5= 8), 8 என்ற எண் வந்தாலும், அவர் சனியின் 8-ம் எண் ஆதிக்கத்திற்கு உரியவர்தான். 8-ம் எண்ணுக்குரிய குண நலன்கள் நேர்மையுடன் இருப்பவர்கள் பலரும், 8-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாம். யார் தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்கும் அதிகாரம் படைத்தவர், சனி பகவான். அதனால் அவரை 'நீதிமான்' என்றும் கூறுவர். அதே போல் 8-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களும், நீதியின் பக்கம் நிற்பவர்களாக இருப்பர்.
மேலும், இந்த எண்ணில் பிறந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகளாகவும், கீழ் நிலையில்இருந்து மேல் நிலைக்கு உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பார்ப்பதற்கு சுறுசுறுப்பு இல்லாதவர்கள் போல் தென்பட்டாலும், அடிப்படையில் இவர்கள் உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரவு பகல் பாராது பணியாற்றுபவர்கள். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் பொறுமையைக் கைவிடாமல் நிதானமுடன் செயல்படுபவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை விட்டுக் கொடுக்காதவர்கள். ராசிப்படி பார்த்தாலும் சனியின் ஆதிக்கம் பெற்ற மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களிடமும் இந்த பண்பைக் காண முடியும். வள்ளுவரின் 'மெய் வருத்தக் கூலிதரும்' என்ற கூற்றுப்படி, உழைப்பிற்கு அடுத்தபடியாக தெய்வத்தை நம்புபவர்கள்.
கடின உழைப்பால் முன்னேறி இருப்பதால் அவர்களது உயர்வு, என்றும் தாழ்ந்த நிலைக்கு திரும்பாதபடி இருக்கும். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் இவர்கள் திறமைசாலிகள். அநியாயம் எங்கு நடந்தாலும், அவற்றை தட்டிக்கேட்கும் பண்பு கொண்டவர்கள். இவர்கள், தங்களின் வாழ்வில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வேதனை கொள்ள மாட்டார்கள். அதனை எதிர்த்து போராடும் மன தைரியம் எப்போதும் உண்டு. மக்கள் செல்வாக்கினை எளிதில் பெறும் சக்தி படைத்தவர்கள். ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு துறைக்கோ தலைமை வகிக்கும் அளவிற்கு அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர்கள். இவர்கள் பொறுமையாக பேசுபவர்கள் என்றாலும், அந்தப் பேச்சில் உறுதித் தன்மை இருக்கும்.
8-ம் எண் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கை, கால், மூட்டுகளின் இணைப்பில் வலி ஏற்படும். வாத நோய் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதிபதி, வக்கீல், ராணுவ அதிகாரி, ரெயில்வே அதிகாரி, இரும்பு உருக்குதல், பத்திரிகையாளர், பதிப்பாளர், இயந்திரங்கள் உற்பத்தி செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகளான என்ஜினீயர், மெக்கானிக், பொது நலப் பிரிவான அரசியல் போன்றவை, இவர்களுக்கு ஏற்ற பணிகளாக இருக்கும். இவ்வளவு சிறப்பு மிக்க 8-ம் எண்ணை நாம் ஒதுக்குவது நல்லதல்ல.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu