ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஸ்ஸாம் மாநில போலீசார் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு : ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஸ்ஸாம் மாநில போலீசார் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு சூரம்பட்டி வலசில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி. சுதா, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், ரூபி மனோகரன், கணேஷ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரர்களாக இணைக்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை பேசியதாவது: பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்கும் போது நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரர்களாக இணைத்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
அஸ்ஸாமில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தேசமக்களின் பாதுகாவலராக ராகுல் வளர்ந்து வருவதை ஏற்க முடியாத பாஜக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு புறம்பாக வழக்குகளை பதிவு செய்து, அவரை முடக்க நினைக்கிறது.
அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் ராகுல் காந்தி
அதிகாரத்தை காட்டி பாஜக மிரட்டி வருவதை எதிர்த்து நிற்கும் திறன் கொண்டவர் ராகுல் காந்தி. அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார் கே. செல்வப்பெருந்தகை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu