கடல் நீரில் விளக்கு எரிந்த கண்ணகி கோயில்..!

கடல் நீரில் விளக்கு எரிந்த கண்ணகி கோயில்..!
X

இலங்கை நந்திக் கடலோரம் அமைந்த வற்றாபளை கண்ணகி கோயிலில் கடல் நீரில் விளக்கு எரிகிறது.

இலங்கை கண்ணகி கோயிலில் கடல் நீரில் விளக்கு எரிந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது.

இலங்கையின் வற்றாபளை கண்ணகி அம்மன் கோயிலின் வைகாசி பெருவிழாவும், அதை தொடர்ந்து கடல்நீரில் விளக்கு எரியும் அதிசயமும் வழக்கம் போல் கடந்த வாரம் நடந்தது.

இது இந்து உலகின் மாபெரும் ஆச்சரியம். காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை பொய்யில்லை. அது ஆழமானது. புரிந்து கொள்ள முடியாதது என்பதை சொல்லும் சாட்சியாக இந்த கோயில் விழா திகழ்ந்து வருகிறது.

இந்த செய்தியை தமிழக ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள பிற இந்து இயக்கங்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என இலங்கை தமிழர்கள் வருந்துகின்றனர்.

இப்போது நாங்கள் இதனை சொல்வது நம் கடமையாகின்றது, அடுத்த வருடமாவது அங்கு சென்று இந்த அதிசயத்தை காண விரும்புவொர் செல்லட்டும். கண்ணகி அம்மனின் பெரும் அருள் பெற்று திரும்பட்டும்.

இலங்கை இந்துக்களின் பூமி. இங்கு ஏகப்பட்ட இந்து திருத்தலங்களும் மகா ஆச்சரியமான புண்ணிய தலங்களும் உண்டு. சீதை சிறைவைக்கபட்ட இடம் மட்டுமல்ல. அங்கிருக்கும் சைவ தலங்களும் மிகவும் பிரசித்தியானவை.

பிரிட்டிஷ் காலத்தில் புல்தின்று சாணமிட்டு மதமாற்ற கும்பலை ஓடவிட்ட கோக்கட்டிசாலை நந்தி சிலை உள்ள சிவாலயம் இங்கு உள்ளது. இது போல் ஏகப்பட்ட சிலிர்ப்பூட்டும் தலங்கள் உண்டு.

தமிழகத்தின் சிதம்பரம், ராமேஸ்வரம் போன்ற சிவாலயங்களின் தொடர்ச்சியான கோயிலாக திரிகோணமலை சிவாலயமும் திகழ்கிறது.

அந்த இலங்கையில் கண்ணகி வழிபாடு நிரம்ப உண்டு. ஒரு காலத்தில் சேர நாட்டில் இருந்து அங்கு பரவிய பத்தினி தெய்வ வழிபாடு வெகுபிரசித்தியானது.

அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் பின்னாளில் போர்ச்சுகீசியர் காலத்தில் மடுமாதா எனும் கிறிஸ்தவ தலமாக மாறிபோனது.

அதுபோன்ற ஏகபட்ட ஆலயங்கள் உண்டு. அதிலொன்றுதான் நந்திகடலோரம் அமைந்த வற்றாபளை கண்ணகி கோவில். அந்த கோவிலும் அங்கிருக்கும் காட்டா விநாயகரும் மிக சக்தி வாய்ந்தவர்கள். முள்ளியாவிளை காட்டா விநாயகர் மிக சக்தி வாய்ந்தவர். தன்னை நம்பி அடைக்கலமான பக்தன் ஒருவனை எதிரிகளுக்கு காட்டாமல் காத்ததால் அவருக்கு காட்டா விநாயகர் என பெயர் வந்தது.

அங்கு வைகாசி மாதம் பௌர்ணமியினை ஒட்டி ஒரு அதிசயம் நடக்கும். காலம் காலமாக நடக்கும் அந்த அதிசயம் இப்போது வரை வருடா வருடம் நடந்து வருகிறது. அது கடல் நீரில் எரியும் விளக்கு. உப்புநீரில் அந்த ஒருவார காலம் தீபம் விடாமல் எரியும்.

எப்படி விளக்கெரிப்பார்கள் என்றால் நந்தி ஏரியில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று கண்ணகி கோவிலில் வைத்து வழிபட்டு வந்து விளக்கெரிப்பார்கள். இன்று நந்திகடல் என அந்த ஏரி ஆகிவிட்டாலும் நீரில் நெருப்பு எரிவது தொடர்கின்றது.

அந்த விளக்கு 7 நாள் எரியும், 7ம் நாள் அதை ஊர்வலமாக எடுத்து சென்று கண்ணகி கோவிலில் வைத்து பொங்கலிடுவார்கள். குறிப்பிட்ட இந்த காலம் மட்டும் தான் நீரில் விளக்கு எரியுமே தவிர மற்ற நாளில் எரியாது. அங்கு இது மிகச் சாதாரணம் என்றாலும் உலகில் இது மிக வியப்பான சம்பவமாக கருதபட்டதால் ஆய்வுகளெல்லாம் நடந்தன.

1964 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வந்த ஆய்வாளர்கள், தீர்த்தத்தில் தீபம் எரிவதைப் பற்றி ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித முடிவும் கண்டறியப்படாது திரும்பினர்.

மீண்டும் 1970ஆம் ஆண்டிலும் இவ்வாறான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள், கடல்நீரிலே காணப்படும் உப்புக் கரைசல், தீபத்தை ஏற்றும்போது நெருப்பு எரியக்கூடிய ஒரு பொருளாக மாறுகின்றது எனப் பொருந்தாத, ஆதாரமற்ற கருத்தை முன்வைத்தனர், ஆனால் உப்பு நீர் எரியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலே ஆய்வு முடிந்தது.

இன்றுவரை தீர்த்தநீரிலே தீபமேற்றுவது பற்றிய விளக்கத்தை, எந்த விஞ்ஞானிகளாலும் கொடுக்க முடியவில்லை. அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட அற்புதமென்றே இதனைக் கொள்ளமுடியும் என விஞ்ஞானம் விட்டுவிட்டது, வானத்தை நோக்கி வணங்கிவிட்டு ஒதுங்கி கொண்டது ஆய்வாளர் குழு.

ஆம் அந்த நந்தி கடல் என்பது வேறொன்றுமல்ல. அன்றே நமிநந்தியடிகள் நினைவாக சிவன் அருளால் நீரால் விளக்கு எரிக்க முடியும் என நீருபிக்கபட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த ஏரியாக இருக்கலாம். எல்லா நாளும் எரியுமா என்றால் எரியாது, மிக சரியாக வைகாசி மாதம் ஒரு நாளில் எரியும், அது வைகாசி பூச நட்சத்திர நாளை அன்மித்து வரும். ஆம் நமிநந்தியடிகளின் குருபூஜை நாளை அன்மித்து இன்றும் அவர் பெயர் கொண்ட நந்தி ஏரியில் இருந்து வரும் நீர் விளக்காக எரிகின்றது.

அதில் எக்காலமும் அவரின் சிவபக்தி தெரிந்து கொண்டே இருக்கின்றது. தமிழக திருவாரூர் ஆலயம் முதல் ஈழத்தின் நந்திகடல் முள்ளியவளை கடல் தீர்த்த விளக்கு என பரிபூரணமாய் நிற்கின்றது சிவனடியாரான நமிநந்தியடிகளார் புகழ். தன் மேல் அன்புவைத்து விளக்கேற்ற பாடுபட்ட பக்தனுக்கு சிவன் கொடுத்த மிகபெரிய அங்கீகாரம் அது. இன்றுவரை அந்த ஆச்சரியம் தொடர்கின்றது, நீருள்ளவரை அது தொடரும்.

முள்ளியவிளை நீர்விளக்கு, நந்திகடல் நீரில் எரியும் விளக்கு நமிநந்தியடிகளின் வாழ்வின் அதிசயத்தின் தொடர்ச்சியன்றி வேறல்ல. நீங்களும் மிக தூய்மையான உள்ளன்போடு விளக்கேற்றி வாருங்கள், காலத்தை வென்று நிற்கும் மிகபெரும் வரத்தினை சிவன் உங்களுக்கும் தருவார். கயிலாயம் அடையும் பெரும் பேற்றோடு காலமெல்லாம் பெரும் அடையாளமாக நந்திகடல் அதிசயம் போல் உங்கள் பெயரும் நிலைத்து நிற்கும், இது சத்தியம்.

கச்சதீவு அந்தோணியார் கோவிலுக்கு விழாகாலத்தில் சில சலுகைகள் வழங்கபடுவது போல சோழநாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் தான் யாரென காட்டி சேரநாட்டில் பத்தினி தெய்வமாக உயர்ந்து இன்றும் இலங்கையில் தெய்வமாக கொண்டாடபடும் கண்ணகி ஆலயம் செல்ல இந்திய தமிழர்களுக்கு வழிவகை செய்தால் நல்லது. விசா கட்டுபாடு இல்லாமல் பிரத்யோக புண்ணிய பயணமாக அது மாற்றபட்டால் மிகவும் நல்லது. இந்துக்கள் சகோதரத்துவமும் அங்கே நடக்கும் அந்த அதிசயத்தை எல்லோரும் அறியவும் வழியாகும். இந்திய அரசு அதற்கு வழிசெய்யும் என நம்புவோம்

இந்துமதம் பொய்யல்ல, அதன் நம்பிக்கையும் தாத்பரியமும் ஒரு காலமும் பொய்யல்ல, அங்கு இல்லாத அதிசயங்களும் அற்புதங்களும் கொஞ்சமல்ல. அப்படி கொட்டிகிடக்கும் கோடி கோடி அற்புதங்களில் இன்று தான் கடல் நீரில் விளக்கு எரிவது, அது மிக மிக பிரகாசமாக ஆண்டுதோறும் எரிவது போல் இலங்கை வற்றாபளை கண்ணகி ஆலயத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. இது இந்துமதத்தின் இயல்பான அதிசயங்களில் ஒன்று. தொன்றுதொட்டு தெய்வம் தான் இருப்பதை காட்டும் விஷயம், அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் அப்பால் நடக்கும் அற்புத விஷயம்.

நன்றி:அண்ணாதுரை கண்ணப்பா ஆற்காடு

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!