3 ஸ்டார் Vs 5 ஸ்டார்: என்ன ஏசி வாங்கலாம்?..
ஏசி பயன்படுத்துவதால் அதிக மின்கட்டணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற கவலைகள் இருப்பதால், சரியான ஏசியைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது முக்கியமாகும். இந்தியாவில் Bureau of Energy Efficiency (BEE), பயனர்கள் சரியான ஏசியைத் தேர்வு செய்வதற்கு நட்சத்திர மதிப்பீடுகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பதிவில் மக்கள் அதிகமாக வாங்க விரும்பும், 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசி-களில் எது சிறந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டார் ரேட்டிங் என்றால் என்ன?
BEE உருவாக்கிய நட்சத்திர மதிப்பீடு முறையானது, ஒரு சாதனத்தின் ஆற்றல் திறனைக் கண்டறிய ஒரு நம்பகத்தன்மையான வழியை வழங்குகிறது. அதாவது அதிக நட்சத்திர மதிப்பீடு கொண்ட சாதனம் அதிக ஆற்றல் திறன் கொண்டது. இந்த ரேட்டிங் முறை 1 நட்சத்திரம் முதல் 5 நட்சத்திரங்கள் வரை இருக்கும். 5 நட்சத்திர ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிக்களின் உபகரணங்கள் மிகவும் ஆற்றல் திறன் மிக்கவையாக இருக்கும்.
3 ஸ்டார் Vs 5 ஸ்டார் வேறுபாடுகள்:
ஆற்றல் திறன்: 3 நட்சத்திர மற்றும் 5 நட்சத்திர ஏர் கண்டிஷனர்களுக்கு இடையே உள்ள முதன்மை வேறுபாடாக அவற்றின் ஆற்றல் திறன் உள்ளது. 3 ஸ்டார் ஏசியுடன் ஒப்பிடும் போது 5 ஸ்டார் ஏசிக்கள் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.
ஆரம்ப விலை: 5 ஸ்டார் ஏர் கண்டிஷனர்கள் 3 ஸ்டார் ஏர் கண்டிஷனர்களை விட விலை கூடுதலாக வருகின்றன. இருப்பினும் காலப்போக்கில் அதிகரித்த ஆற்றல் திறன் மற்றும் செலவு சேமிப்புகள் காரணமாக, நாம் முதலில் செலவு செய்யும் பணம் ஈடு செய்யப்படுகிறது. இருப்பினும் உங்களிடம் பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தால் அல்லது ஏசியை அடிக்கடி பயன்படுத்தாமல் இருந்தால் 3 ஸ்டார் ஏசி சிறந்த தேர்வாக இருக்கும்.
சுற்றுச்சூழல் தாக்கம்: 5 ஸ்டார் ஏசிக்கள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அதிக நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசியில் முதலீடு செய்வது மூலமாக, இந்த சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நல்லது செய்ய முடியும்.
நீங்கள் அடிக்கடி ஏசி பயன்படுத்துவீர்கள் என்றால், மின்கட்டணத்தை சேமிப்பதற்கு 5 ஸ்டார் ஏசி வாங்குவது நல்லது. இல்லை வெயில் காலத்திற்கு மட்டும் தான் அதிகமாக பயன்படுத்துவோம் மற்ற காலங்களில் அந்த அளவுக்கு பயன்படுத்த மாட்டோம் என்றால், 3 ஸ்டார் ஏசி வாங்கிக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
மின்சாரக் கட்டணங்கள்: உங்கள் பகுதியில் மின்சாரக் கட்டணம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதிக மின்சார செலவுகள் உள்ள பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், 5 ஸ்டார் ஏசியில் முதலீடு செய்வது நல்லது.
அறை அளவு: ஏசியில் குளிரூட்டும் திறன் அதன் டன் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது 1 டன், 1.5 டன், 2 டன் போன்றவை. சிறப்பான குளிரூட்டும் திறனுக்காக, உங்கள் அறையின் அளவைப் பொறுத்து டன்னேஜைத் தேர்வு செய்வது சரியானது.
100 சதுர அடி வரை - 0.8 டன்
150 சதுர அடி வரை- 1 டன்
250 சதுர அடி வரை - 1.5 டன்
400 சதுர அடி வரை - 2 டன்
பட்ஜெட்: உங்களது பட்ஜெட் என்னவென்பதை மதிப்பீடு செய்து, எந்த ஏர் கண்டிஷனர் வாங்குவது என்பதை தீர்மானிக்கவும். 5 ஸ்டார் ஏசிக்கள் ஆரம்பத்தில் விலை அதிகமாக இருந்தாலும் நீண்டகால பயன்பாட்டிற்கு சிறந்தவையாகும். மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற ஏசி என்ன என்பதைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu