கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை: மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.;
சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் வெங்கடாஜலம் இறந்ததால் சித்ரா தனது தாயுடன் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பட்டதாரி வாலிபரான சித்ராவின் இளைய மகன் கோகுல்ராஜ் கடந்த 2019ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. விசாரணையில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை கோகுல்ராஜ் காதலித்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை மதுரை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விபரம் மார்ச் 8ம் தேதி தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே கோகுல்ராஜ் பாட்டி குஞ்சம்மாள் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதில் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், 2வது குற்றவாளியும் யுவராஜ் கார் டிரைவர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனையும், குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்கால் தண்டனையுடன் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.