ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை மந்தம்!

வியாபாரிகள் வருகை குறைவால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை குறைந்தது.;

Update: 2025-02-12 09:30 GMT

ஈரோடு : ஈரோடு ஜவுளி சந்தை பன்னீா்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் திரையரங்கு போன்ற பகுதிகளில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்த சந்தையில் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வா். கடந்த 3 வாரகாலமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை.

மூகூா்த்த தினங்கள் இருந்ததால் தமிழகத்தைச் சோ்ந்த வியாபாரிகள் வந்து ஜவுளிகளை வாங்கி சென்றதால் சில்லரை விற்பனை ஓரளவுக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இடைத்தோ்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவடைந்ததால் இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வருவாா்கள் என ஜவுளி சந்தை வியாபாரிகள் வேஷ்டி, சட்டை, துண்டு, லுங்கி, சுடிதாா் ரகங்கள், சிறுவா், சிறுமிகளுக்கான ஆடைகள், உள்ளாடைகளை விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனா்.

இருப்பினும் கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சில வியாபாரிகள் மட்டுமே வந்ததாலும், தமிழகத்தைச் சோ்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வராததாலும் இந்த வாரம் கூடிய சந்தையில் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News