திருவண்ணாமலையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பு

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

Update: 2022-04-12 01:11 GMT

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்பு  நேற்று முதல் தொடங்கியது.  இப்பயிற்சி வருகிற மே மாதம் 19-ந் தேதி வரை நடக்கிறது.

பயிற்சி வகுப்பை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கிராம ஊராட்சி அமைப்புகளோடு சமுதாய நிறுவனங்களை ஒன்றிணைத்தல் குறித்த பயிற்சிக்கு 860 ஊராட்சிகளில் இருந்து ஒரு ஊராட்சிக்கு 6 பேர் என மொத்தம் 5160 பிரதிநிதிகளுக்கு 172 அணிகளாக மாவட்டத்தின் 18 வட்டாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வேங்கிக்கால், காட்டாம்பூண்டி, கண்டியாங்குப்பம், கல்லொட்டு, ஆடையூர், ஆணாய்பிறந்தான், தேவனந்தல், அல்லிகொண்டாப்பட்டு, அடி அண்ணாமலை, சின்னகல்லாபாடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 8 ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து 10 தலைவர்கள், 10 பொருளாளர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் 8 செயலாளர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழு மூலம் 10 உறுப்பினர்கள், 9 சமுதாய வளப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அரசு சேமிப்பு நிதியிலிருந்து ரூ.22 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈப்பு அறை, ஈப்பு ஓட்டுனர்களின் ஓய்வறை மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காணொலி காட்சி அறையை கலெக்டர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலையமான், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) லட்சுமி நரசிம்மன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News