எஸ்டி சான்று கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட குருமன்ஸ் இனத்தினர்

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டி சான்று கேட்டு குருமன்ஸ் இனத்தினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-03-31 00:49 GMT

எஸ் டி சான்று கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட குருமன்ஸ் இனத்தினர்.

திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஸ்ரீ வீரபத்திரசுவாமி குருமன்ஸ் பழங்குடியினர் நலச்சங்கம் சார்பில் குருமன்ஸ் சமூகத்தினருக்கு எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி பிறப்புரிமை மீட்டெடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

மாநில குருமன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் ரமேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டு பேரிகார்டு மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் அலுவலக சுற்று சுவர் அருகில் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருப்பு துணியை வாயில் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில குருமன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் கூறுகையில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் ,ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்த அறிக்கையின் படி குருமன்ஸ் இன மக்களுக்கு எஸ்டி சாதி சான்று வழங்க வேண்டும், பழங்குடியினர் சாதி சான்று கிடைக்காததால் தங்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக கூறினார். 

மேலும் உயர்நீதி மன்றம் பழங்குடியின ஆராய்ச்சி மையத்திலிருந்து ஆய்வு செய்யப்பட்டு ஆய்வறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொண்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கோட்டாட்சியருக்கு பழங்குடி இயக்குனர் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். இவ்வாறு நமது இனத்திற்கான சட்ட ரீதியான பல ஆதாரங்கள் இருந்தும் நமது இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் செயல்படுகின்றனர்.

எனவே மன உறுதியோடு நமது இனத்தின் பிறப்புரிமையை மீட்டெடுத்தே தீருவோம் என கூறினார். பிறகு குருமன்ஸ் இன மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர்கள் ரயில்வே மேம்பாலம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேசி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

பின்னர் குருமன் சங்க முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை இரண்டு வாரம் தள்ளி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

பின்னர் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் நிர்வாகிகளை சந்தித்து எஸ்டி சான்று வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அனைவரும் கலைந்து சென்றதால் சுமார் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News