திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

பௌர்ணமியை முன்னிட்டு இரண்டாவது நாளாக கிரிவலம் வந்த பக்தர்கள், கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்.

Update: 2024-03-26 00:51 GMT

அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களின் கூட்டம்

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய சிறப்புக்குரிய இத்திருநகரில், அக்னி மலையாக அண்ணாமலையாரே எழுந்தருளியிருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் காலை 9.54 மணிக்கு தொடங்கி, நேற்று பகல் 12.29 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பகல் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை 5 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று மாலை வரை கிரிவலம் சென்று கொண்டிருந்தனர். கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது தரிசனம் செய்யும் நிலை நேற்றும் ஏற்பட்டது. வழக்கம்போல அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசன வரிசை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தது. ஞாயிறு அரசு விடுமுறை போன்ற காரணங்களால் நேற்று கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. அதோடு, வெளி மாநில பக்தர்களின் வருகையும் வழக்கத்தைவிட அதிகரித்திருந்தது.

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று செயல்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை.

Tags:    

Similar News