கிரிவலம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்

கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக அண்ணாமலையார் கிரிவலம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2022-12-09 00:45 GMT

அண்ணாமலையார் கிரிவலம் .

உலகப் பிரசித்திபெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கி, கடந்த 10 நாட்களும் வெகு விமரிசையாக கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. அதன்படி நேற்று முன்தினம் அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, தீபம் முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின்போது, இரண்டாம் நாள் காலை கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத் தானே குடும்பத்துடன் சுற்றி கிரிவலம் வருவார் .

இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளிலும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் திருவூடல் முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார்.

அதன்படி நேற்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தார். அருணாசலேஸ்வரருடன், பராசக்தி அம்மனும், சின்னக்கடை வீதியில் உள்ள துர்கை அம்மனும், அடி அண்ணாமலை கிராமத்தில் ஆதி அருணாசலேஸ்வரரும் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அண்ணாமலையாரை எதிர்நோக்கி அன்பர்கள் சாலை நெடுகிலும் திரண்டிருந்தனர். ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆச்ரமம் , ஸ்ரீ ரமணாஸ்ரமம்  சார்பில் சுவாமி அம்மனுக்கு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கிரிவலத்தையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிரிவலத்தை முடித்துக்கொண்டு உற்சவா் சுவாமிகள் நேற்று இரவு கோயிலுக்கு திரும்பினா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

Tags:    

Similar News